Wednesday, November 21, 2007

ஒரு பெண்ணின் பயணம்

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா

பிள்ளைப் பருவத்தில் பதியும் எண்ணங்கள் பச்சை மரத்தில் ஆணியென இறங்கிப் பதிந்து விடும்
என் எட்டுவயதில் எட்டையாபுரத்தில் பாரதி குடியிருந்த இல்லத்தில் சிறிது காலம் வசித்தவள்.அதே தெருவில் பாரதி பிறந்த இல்லத்தில் பாரதியின்
தாய் மாமன் சாம்பசிவ அய்யரிடம் தினமும் மாலையில் சென்று பாரதி பாட்டுக்கள் கேட்பேன். அவர் எப்படி இருந்தார், என்னவெல்லம் செய்வார் என்று கேட்பேன். குழந்தை என்று அந்தக் கிழவர் என்னை ஒதுக்கவில்லை. சுதந்திரம் பெறாத காலம் அது.
அவர் பாடியதில் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது
“பயமென்னும் பேய்தனை அடிப்போம் “
ஜய பேரிகை கொட்டடா என்று அந்த முதியவர் பாடும் பொழுது உடலே
சிலிர்க்கும். மாமனே முரசொலித்தால் மருகனைக் கேட்க வேண்டுமா?
முன்னேற்றப் பாதையில் செல்ல நினைக்கும் ஒருவன் முதலில் தூக்கி
எறிய வேண்டியது அச்சம். அச்சத்தைநீக்கி விட்டால் அதன் குழந்தைகளும் ஓடிவிடும்.
சோதனைச் சூறவளிகளிலும் நான் பயந்தது இல்லை. என் துணிச்சல்
என் கவசம். அதனை அணிந்து கொண்டு வாழ்க்கை ஏணியில்
பயணம் செய்தேன். என் உறுதி என்னை ஏற்றத்தில் வைத்தது.
நான் ஒரு சாமான்யமானவள். என் பார்வையில், என் வாழ்க்கை
ஓட்டத்தில் சரித்திரம் பார்க்கலாமே. தெரிந்ததை நினைவூட்டுவதில்
தவறில்லை. அறியாத செய்திகள் தெரிந்து கொள்வதும் சரியே.
என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வலைப்பூ இது.
என் படைப்புகள் வரும்.
நான் படித்தது வரும்
கண்டதும் கேட்டதும் வரும்.
ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் விளிம்பிற்கே ஓடிவிட்டேன்.
என் கல்லறை தெரிகின்றது.
திரும்பிப் பார்க்கின்றேன்.
பார்த்ததை, நான் உணர்ந்ததை இந்த வலைப் பூவில் ஓவிய
மாக்குகிறேன்.
நிமிர்ந்த நன்னடை , நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும்
அஞ்சாத செருக்கு
எனக்குள் பாரதி இருந்து இயக்கிணான்.
ஒரு பெண்ணின் துணிச்சலான பயணம்

Friday, November 2, 2007

தமிழுக்கும் அமுதென்று பேர்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழின்ப தமிழெங்கள் உயிருக்கு நேர்